வியாழன், பிப்ரவரி 07, 2013

கொடிகட்டிப் பறக்கிறது ஊட்டச் சத்து வணிகம்.


மருத்துவர் சிவராமன்:- என் புள்ளை போஷாக்கா வளர்றதுக்கு டானிக் ஏதாவது கொடுக்கலாமா டாக்டர்?'' -
குழந்தைகள் மீது அக்கறை தொனிக்கும் இந்தக் கேள்வியை மருந்து நிறுவனங்கள் எப்படி உருமாற்றிக்கொண்டு இருக்கின்றன தெரியுமா?
32 பில்லியன் ரூபாய் சந்தையாக!

ஏறத்தாழ 46 சதவிகிதத்துக்கும் மேலான குழந்தைகள் சவலையாகவும் சத்துக்குறைபாட்டுடனும் இருக்கும் இதே நாட்டில்தான், இன்னொரு பக்கம் பால் மாவு, வைட்டமின் மாத்திரைகள், புரதச்சத்து மாவு, கூடுதல் ஊட்ட உணவுகள் என வகை வகையாகக் கொடிகட்டிப் பறக்கிறது ஊட்டச் சத்து வணிகம்.

'ரொம்ப மெலிஞ்சிருக்கானே புள்ள; இந்தப் புரத உணவைக் கொடுங்க; தோசை மாவுலகூடக் கரைச்சி ஊற்றலாம்'' என்ற நேரடி வணிகரின் சிபாரிசு, ''ஜீரோ சைஸ் இடுப்புடன் அழகா இருக்கணுமா? பட்டினி கிடங்க; வேற எதுவும் சாப்பிடாம இந்த டிரிங்க்கை மட்டும் குடிங்க; அப்படித்தான் எங்க நாத்தனார் 30 கிலோ குறைஞ்சாங்க தெரியுமா?'' என்ற கதைகள்; சிக்ஸ்பேக் உடம்புக்கு அந்தப் புரத மாவைச் சாப்பிட்டே ஆக வேண்டும்!'' என்று உடற்பயிற்சி நிலையங்களில் சொல்லப்படும் பரிந்துரைகள் என டப்பா புரதச் சத்து உணவு வணிகம் இன்று மிகமிக அதிகம். ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனமும் கிட்டத்தட்ட 2,50,300 கோடிக்கு தனது புரத மாவை விற்கிறது.

'இந்த அவசர உலகில் இதெல்லாம் அவசியம்தானே சார்?' என நீங்கள் கேட்கலாம். பெரும்பாலும் சோள மாவிலும் பால் புரதங்களிலும் வைட்டமினும் கனிமங்களும் சேர்த்துத் தயாரிக்கப்படும் இந்த ஊட்டப் பொருளைக் காட்டிலும் நம் வீட்டு உணவுகள் எவ்வளவோ மேல் என்பதுதான் எங்கள் ஆதங்கம். டப்பா உணவைக் காட்டிலும் வீட்டுப் பொங்கலிலோ, சத்து மாவுக் கஞ்சியிலோ இருந்து பெறப்படும் புரதம் முழுமையாக உட்கிரகிக்கப்படும் என்பது பல முறை உணவியலாளர்களால் மறுபடி மறுபடி சொல்லப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக நம் பாரம்பரிய உணவுகளான வெண்பொங்கல், சோள தோசை, உளுந்தங்களி, பாசிப்பயறு மாவு உருண்டை, சத்து மாவு என இவை எல்லாமே ஊட்டம் தரும் புரத உணவு கள்.

தோசையிலோ, களியிலோ அல்லது சத்து மாவிலோ வாசம் போகாமல் இருக்க ரசாயனம் சேர்ப்பது இல்லை. பிடித்த வெனிலா வாசம் வேண்டும்... சாக்லேட் வாசம் வேண்டும் என்று மணக் கூறுகளைச் சேர்ப்பது இல்லை. கெட்டுப்போகாமல் இருக்க ஆன்டிஆக்சிடென்ட்டுகள் சேர்ப்பது இல்லை. பொலபொலவென உதிர வேண்டும் என சிலிக்கான் ரசாயனங்கள் சேர்ப்பது இல்லை. நீர்த்துவம் வந்துவிடக் கூடாது என நீர் உரிஞ்சும் வாயுக்கள் அல்லது உணவைப் பாதுகாக்க இயற்கையைக் கெடுக்கும் பிளாஸ்டிக் முதலான ஏராளமான உறைகள் போடுவது இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு ஸ்பூன் உணவுக்கு ஒரு நாள் சம்பளப் பணம் போடுவது இல்லை. ஆனால், சந்தையில் வரும் ஊட்ட உணவில் இத்தனையும் உண்டு தோழரே!

நம் பாரம்பரிய உணவில் என்ன உள்ளது தெரியுமா? ஆறு மாதங்களில் தாய்ப்பாலுடன் சேர்த்து, திட உணவுக்கு கைக்குழந்தை போகும்போது ''டப்பா உணவு தேவை இல்லை. குருணையரிசி; பாசிப் பருப்பு; தேங்காய் எண்ணெய் இரண்டு துளி சேர்த்து கூழாகக் காய்ச்சிக் கொடுங்கள்' என்று இன்றளவும் சொல்லி வருபவர்கள் நம் பாட்டிகள் மட்டுமல்ல... உலகப் புகழ்பெற்ற வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும்தான். அதற்கு அவர்கள் வைத்துள்ள பெயர் ஹெச்.சி.எம். (High Calorie Meal).அதே குழந்தை சோறு சாப்பிட ஆரம்பிக்கும்போது பாசிப்பயறும் நெய்யும் மிளகும் சேர்த்து திணை அரிசியில் அல்லது சாமை அரிசியில் வெண்பொங்கல் தயாரித்துக் கொடுங்கள். அது அளிக்கும் புரதச் சத்து, இரும்புச் சத்து, மிளகின் சத்து ஆகியவை இணைந்து சுவாச மண்டல நோய் எதிர்ப்பாற்றலை அளிக்கும். முளைகட்டிய பாசிப்பயறும் கேழ்வரகும் மாப்பிள்ளை சம்பா சிகப்பரிசி, வறுத்த உளுந்து, நிலக்கடலை, கொஞ்சம் முந்திரி, கொஞ்சம் சுக்கு சேர்த்து அரைத்துத் தயாரிக்கும் சத்து மாவுக் கஞ்சி வெறும் புரதம் மட்டும் தருவது இல்லை; இரும்பும் கால்சியமும் இன்னும் உடலின் பல வளர்சிதை

மாற்றத்துக்குத் தேவையான தாவர நுண் பொருளும் சேர்த்துத் தரும்.

மாதவிடாய் துவங்கிய பெண்ணுக்கு இடுப்பைப் பலப்படுத்தும் என்று தாய் மாமன் சீதனமாக தரும் உளுத்தங்களியின் புரதம் இடுப்பை மட்டுமல்ல, கருப்பையையும் வலுப்படுத்தும் என்ற பாரம்பரிய தமிழ் மருத்துவக் கருத்தை இன்றைய ஆய்வுகள் உறுதிப்படுத்திஉள்ளன. இப்படி வாழ்வின் ஒவ்வொரு நகர்வுக்கும் நம் முன்னோர்கள் சுட்டிக்காட்டி, சில நேரம் கலாசாரத்தில் கலந்து காட்டிச் சென்ற உணவைக் காட்டிலும் இந்த டப்பா உணவு பெரிதாக நன்மை செய்வது இல்லை. மாறாக, இப்படி ஊட்டத்தை உடனடியாக டப்பா உணவின் மூலம் தருவதில், உடல் கொஞ்சம் கொஞ்ச மாக சத்துக்களைக் கனியில் இருந்தும் தானியத்தில் இருந்தும் பிரித்து எடுப்பதை மறந்துவிடுகிறது. சர்க்கஸ் சிங்கம், ரப்பர் வளையத்துக்குள் போவதைப் போல, இதுபோன்ற ஊட்ட உணவு களின் ஆக்கிரமிப்புகள் உடலின் ஆர்ப்பரிக்கும் ஆற்றலை வேகமாக இழக்கச் செய்யும். நேரம் இல்லை என்ற ஒரே விஷயத்துக்காக எதிர்காலத்தை மருந்துக்கு அடகுவைப்பதைவிட, கொஞ்சம் மெனக்கெடுவதும் கொஞ்சம் மூளைச் சலவை செய்யும் விளம்பரத்தைவிட்டு விலகி, பாரம்பரியத்தை உற்றுப் பார்த்தால் உண்மை தெரியும் நண்பர்களே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...