லேசாக உடம்பு காய்ந்தால், உடனே பாராசிட்டமால்...தலை வலித்தால் ஏதேனும் ஒரு பெயின்கில்லர்...தும்மினால் மாத்திரை, இருமினால் மருந்து...
அளவின்றி, அறிவுரையின்றி எடுத்துக்கொள்கிற எந்த மருந்தும், உயிருக்கே உலை வைக்கிற ஆபத்தில் முடியலாம் எனத் தெரிந்தும், யாருக்கும் அக்கறையில்லை. எடுத்ததற்கெல்லாம் மருத்துவரையும், மருந்துகளையும் தேட நினைக்கிற மக்களின் மனப்பான்மையை மாற்றும் முயற்சியாக ‘வீட்டுக்கொரு சித்த உணவியல் நிபுண’ரை உருவாக்கும் புதுமையான முயற்சியில் இறங்கியிருக்கிறார் சித்த மருத்துவர் அருண் சின்னையா. ‘நோயற்ற வாழ்க்கைக்கு மட்டுமின்றி, பிழைப்புக்கான ஒரு வழியாகவும் அமையும் சித்த உணவியல் துறை’ என்கிறார் அவர்.
‘‘நாம குடிக்கிற தண்ணீர்லேர்ந்து, சாப்பிடற ஒவ்வொரு உணவுக்கும் ஒரு மருத்துவக் குணம் உண்டு. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னாடி எழுதப்பட்ட ‘பதார்த்த குண சிந்தாமணி’ங்கிற புத்தகத்துலயே இதுக்கான குறிப்புகள் இருக்கு. நாகரிகம் என்ற பேர்ல மாறிப் போன விஷயங்கள்ல முதலிடம் நம்ம உணவுப் பழக்கத்துக்குத்தான்.
பெருசா, குண்டா இருக்கிற அரிசிதான் சத்தானது. சத்தே இல்லாத, மெல்லிசான, பாலிஷ் போட்ட அரிசியைத்தான் நாம விரும்பறோம். வைட்டமின் இல்லை, கால்சியம் கம்மினு நாமளாவே மல்ட்டி வைட்டமின் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடறோம். நம்ம வீட்டு சமையலறைக்குள்ள இருக்கிற மிளகு, சீரகம், வெந்தயத்துக்கு எந்த சத்து மாத்திரையும் இணையாகாது’’ என்கிற டாக்டர் அருண் சின்னையா, தொடர்ந்து சொல்கிற தகவல்கள் ஆச்சரியம் அளிக்கின்றன.
‘‘குடிப்பழக்கத்தை மறக்கடிக்க இன்னைக்கு என்னென்னவோ சிகிச்சைகள் செய்யறாங்க. குடிக்கிறவங்களுக்கு தினம் 100 கிராம் சிறுபருப்பையும், ஏதாவது ஒரு கீரையையும் சேர்த்துக் கடைஞ்சு கொடுத்தாலே, குடிக்கணும்ங்கிற எண்ணம் மாறும். பருப்புக்கு அப்படியொரு மகத்துவம் உண்டு.
அதேபோல உடல் பருமன்... தினம் காய்கறி சாலட்டையோ கீரையையோ ஒருவேளை உணவா சாப்பிட்டா, கணிசமான எடை குறையறதைப் பார்க்கலாம். எடை ஏறக்கூடாதுனு நினைக்கிறவங்க, அடிக்கடி ஓட்டல்ல ஸ்பெஷல் மீல்ஸ் சாப்பிடறதைத் தவிர்க்கணும்.
‘ஜங்க் ஃபுட்’ மோகத்துலேர்ந்து குழந்தைங்களை எப்படி மீட்கறதுங்கிறது எல்லா பெற்றோருக்கும் மிகப்பெரிய கவலையா இருக்கு. அந்த உணவுகளை சாப்பிடறதால உடனடியா அவங்களோட ரத்தத்துல ஹீமோகுளோபின் அளவு குறையுது. பார்வைக்கோளாறு வருது. அலர்ஜி தாக்குது. அந்தக் குழந்தைங்களுக்கும் தினம் ஒரு கீரையும் பருப்பும் ஃப்ரெஷ் ஜூசும் கொடுத்துப் பழக்கப்படுத்தினா, ஜங்க் ஃபுட் மோகத்துலேர்ந்து மீட்கலாம். இது ஒருநாள், ரெண்டு நாள்ல நடக்காது. மாசக்கணக்கானாலும் அலுக்காம, தொடர்ந்து கொடுத்துப் பழக்கினாதான் பலன் தெரியும்.
பருமனைக் குறைக்க நினைக்கிற பலரும், இன்னிக்கு ஓட்ஸ் பின்னாடி ஓடறது சகஜமா இருக்கு. ஓட்ஸ் என்பது இந்தியாவுல இருக்கிறவங்களுக்கு ஏற்ற உணவே இல்லை. ரொம்பவும் வறண்ட உணவான அது, பனிப்பிரதேசத்துல வாழறவங்களுக்கானது. நம்மூர்ல அதை எடுத்துக்கிட்டா, ரத்தச்சுழற்சி மாறுபட்டு, அனீமியாவுக்கு அஸ்திவாரம் போட்டுடும்.
எதை சாப்பிடணும், எப்ப சாப்பிடணும், எவ்வளவு சாப்பிடணும்னு தெரிஞ்சாலே, ஆரோக்கியம் கை நழுவிப் போகாமப் பார்த்துக்கலாம். அது புரியாம உணவு முரண்படும்போதுதான், நோய்கள் வெளிப்படுது. இதையெல்லாம் மக்களுக்கு சொல்றதுக்காக நான் ஆரம்பிச்சதுதான் ‘வீட்டுக்கொரு சித்த உணவியல் நிபுணர்’ கான்செப்ட்.
ஆங்கில மருத்துவத் துறைல, டயட்டீஷியன்னு சொல்ற சத்துணவு நிபுணர்கள் இருக்காங்க. அப்படியிருக்கிறப்ப, ‘அரசால அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவத் துறைலயும் அப்படி ஏன் ஒரு பிரிவு இருக்கக் கூடாது’ங்கிற எண்ணத்துல தொடங்கினது. சித்த உணவியல் படிக்கிறவங்களுக்கு, அது பிழைப்புக்கான வழியாகவும் அமையும்’’ என்கிறவர், சித்த உணவியல் நிபுணர்களுக்கான அஞ்சல் வழிக் கல்விப் பயிற்சி, அதைத் தொடர்ந்த செமினார் போன்றவற்றை நடத்துகிறார்.
‘‘மருத்துவம் என்னிக்குமே மக்களுக்குப் புரியாத புதிரா இருக்கக் கூடாது. எதுக்கெடுத்தாலும் மருந்துகளையும், மருத்துவர்களையும் தேடி ஓடறது நல்ல அடையாளமில்லை. நம்ம வீட்டு சமையலறையைவிட சிறந்த மெடிக்கல் ஷாப் வேற இல்லை. அங்க உள்ள ஒவ்வொரு பொருளோட மகத்துவத்தையும் மருத்துவக் குணத்தையும் புரிஞ்சுக்கிட்டீங்கன்னா, உங்க குடும்பத்துக்கு உங்களைவிட சிறந்த டயட்டீஷியனும் இல்லை!’’
நிறைவாகச் சொல்கிறார் அருண் சின்னையா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக