புதன், டிசம்பர் 30, 2015

பைய்யத் ரகசியம்


தெள்ளத் தெளிவாக குர்ஆனுக்கும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறைக்கும் முரணாக மார்க்கத்தின் பெயரால் முஸ்லிம்களிடையே பிர்- முரீது வியாபாரம் நடந்து வருகிறது. அந்த வியாபாரத்தில் இரகசியம்! இரகசியம்! என்று சொல்லியே மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அந்த ரகசியம் என்ன? என்பதை இந்தச் சம்பவம் அம்பலப்படுத்துகிறது. யாரையும் கேவலப்படுத்தும் நோக்கத்துடன் அல்ல. மக்களுக்கு சத்திய மார்க்கத்தை உணர்த்த இக்கட்டுரை இடம் பெறுகிறது.

எனது மாமனார் வீட்டிற்கு எதிர் வீட்டில் உள்ள பெரியவர் ஒருவர் முரீது பெற்றுள்ளார் எனத் தெரிந்து அவரை சந்தித்து முரீது பெற்றுள்ளதைப் பற்றி விசாரித்தேன். அப்பொழுது அவர் சொன்னதாவது 'தம்பி' நான் தற்போது கலவைக்கு 1 கீ.மீ. முன்னுள்ள அகரம் என்னும் காலனியில் குடியிருக்கும் ஷைகு அப்துல் கரீம் காதிரி என்பவரிடம் முரீது பெற்றேன். எனக்கு ஒரு வருடம் முன்பே என் மூத்த மகன் முரீது வாங்கினான். நான் என் மகனிடம் ஷைகு என்ன சொல்லிக் கொடுத்தார் எனக் கேட்டேன். அப்பொழுது என் மகன் எனக்கு ஷைகு ஒரு கலிமாவை கற்று கொடுத்தார். ஆனால் அதை யாரிடமும் சொல்லக்கூடாது, மீறி சொன்னால் நெஞ்சு வலி வந்து இறக்க நேரிடும். இந்த கலிமாவை அந்த ஷைகிடம் முரீது பெற்ற பீர்பாய்களிடம் மட்டும்தான் சொல்ல அனுமதி உள்ளது என மகன் சொன்னான். இதைக் கேட்டு எனக்கு தன்னை அறியாத ஒரு ஞானத்துடன் அவரிடம் சென்று முரீது பெற்றேன். அவ்வாறே ஷைகு கலிமாவை சொல்லிக் கொடுத்தார். அதனை யாரிடமும் சொல்லக்கூடாது என தடை விதித்தார்.

முரீது பெறுவதற்கு நீர் தயாரெனில் சொல் போகலாம் என என்னிடம் கேட்டார். ஆனால் ஷைகிடம் நீ ஸலாம் சொல்லக்கூடாது 'ஆதாப்' எனச் சொல்லவேண்டும். அவரிடம் முஸாபா செய்யும்போது அவருடைய கட்டை விரலுடன் உன்னுடைய கட்டை விரலை சேர்த்து முஸாபா செய்யவேண்டும். ஷைகு உட்கார்ந்திருந்தால் அவருடைய மடியில் உன் தலையை சாய்த்து முஸாபா செய்ய வேண்டும். இது என்னுடைய ஷைகு கற்றுத் தந்தது என பெரியவர் கூறினார். அதன் பிறகு நான் அந்த பெரியவரிடம் கேட்ட சில கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

நான்: பைஅத் என்றால் என்ன?

பெரியவர்: பைஅத் என்றால் மைய்யத் ஆகிவிடுதல்

நான்: உங்கள் தரீக்கா எது?

பெரியவர்: காதிரிய்யா தரீக்கா

நான்: உங்களுக்கு ஷைகு சொல்லிக் கொடுத்த திக்ருகள் யாவை?

பெரியவர்: ஒரே கலிமாதான். அதை நாவால் சொல்லக் கூடாது. அதனை உள்ளத்தால் மட்டுமே சொல்லவேண்டும். ஆனால் அதனை யாரிடமும் சொல்ல மாட்டோம்.

நான்: தொழுகை பற்றி வலியுறுத்திச் சொன்னாரா?

பெரியவர்: நீங்கள் வியாபாரம் செய்வதால் ஜும்மா மட்டும் தவறாமல் போகவும்.

நான்: ஒரு நாளைக்கு 5 வேளைத் தொழுகை கட்டாயக் கடமையாயிற்றே.

பெரியவர்: நாங்கள் மஃரிபத்தில் ஆகிவிட்டவர்கள்.

இதற்குப்பிறகு அந்த பெரியவரிடம் நான் தங்கள் ஷைகை காண வேண்டும் வருகிறீர்களா? என்றேன். பெரியவர் சம்மதித்து என்னை ஷைகிடம் அழைத்துப் போனார். ஷைகு வெளியே சென்று இருந்தார். வீட்டில் அவரின் மனைவி சற்று பொறுங்கள், அவர் வந்து விடுவார் எனக் கூறினார். சிறிது நேரத்தில் ஷைகு வந்தார். அப்பொழுது ஷைகிடம் நான் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் சொன்ன பதில்களும் கீழ்வருமாறு:

நான்: உங்கள் தரீக்கா எது?

ஷைகு: காதிரிய்யா

நான்: தரீக்காவை ஆரம்பித்தவர்?

ஷைகு: முஹியத்தீன் அப்துல் காதிர் ஜிலானி(ரஹ்)

நான்: தாங்கள் கற்றுக் கொடுக்கும் கலிமா எது?

ஷைகு: அதை முரீது வாங்குபவனுக்கு மட்டும் சொல்லவேண்டும்.

நான்: கலிமா 'லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்' தானே, அதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

ஷைகு: நான் கற்றுக் கொடுப்பது மஃரிபத் கலிமா. அதை இதயத்தால் மட்டும் தியானிக்க வேண்டும். ஏனெனில் வாய் பொய் சொல்லுகிறது. ஹராம் சாப்பிடுகிறது. எனவே வாயால் தியானிக்கக் கூடாது.

நான்: மனதில் தியானம் நிலை பெறுவது கடினமாயிற்றே.

ஷைகு: அதனை மனதில் படிய வைப்பதே ஷைகின் கடமை.

நான்: தங்கள் முரீது தொழுவதில்லையே?

ஷைகு: அதை அவரிடம் கேளும்.

நான்: நீங்கள் தொழுவதில்லையே?

ஷைகு: பைத்தியமே, தொழுது எவன் வலியானான்? தொழுகையை விட திக்ருதான் மேலானது. திக்ரு செய்பவன் தான் வலியாவான். பானிப்பட்டில் ஒரு வலி அவர் தொழுகை இல்லாமலேயே வலி ஆனார்.

நான்: அல்லாஹ் குர்ஆனில் தொழுபவர்கள் தான் மூமின்கள் என்று சொல்கிறானே?

ஷைகு: குர்ஆன் என்ன உனக்காகவா இறக்கப்பட்டது? உன் மீதா வஹீ வந்தது? இல்லையே? அது நபிகள்(ஸல்) மீது தானே இறக்கி வைக்கப்பட்டது. எனவே அந்த வஸீயத்துகள் எல்லாம் அவருக்கே.

ஷைகு: நீ இவ்வாறு எல்லாம் குறுக்குக் கேள்விகள் கேட்கிறாயே! நீ சொல், குர்ஆனில் 'தன் ஆன்மாவை அறிந்தவன் தன் இறைவனை அறிவான்' என்று இருக்கிறதே (இப்படி குர்ஆனில் இல்லை) இதில் சொல்லப்பட்டிருப்பது படி ஆன்மாவை எவ்வாறு அறிவது? தொழுகையிலா? இல்லை. நான் சொல்லும் முழு கலிமாவால் தான். நீங்கள் சொல்வது அரை கலிமா. இந்த இந்தியாவிலேயே முழு கலிமாவை சொல்லி ஈடேற்றம் செய்பவன் நானும், என் பீர்பாய்களும் தான்.

நான்: மார்க்கத்தில் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை கண்டால் ஸலாம் சொல்லுங்கள் எனச் சொல்லி இருக்கையில் தாங்கள் மட்டும் 'ஆதாப்' என்று சொல்கிறீர்களே! இது மார்க்கத்தை நிராகரிப்பதல்லவா?

ஷைகு: மார்க்கத்தில் சொல்லி இருப்பது முஸ்லிம்களுக்குத்தான். மூமின்களுக்கு இல்லை. நான் மூமின். ஆகவே ஸலாமை விட மேலான ஆதாப் எனச் சொல்லுகிறேன்.

நான் இந்த ஷைகின் உல்ட்டா பேச்சுகளைக் கேட்டு இனி இவரிடம் பேசிப் பயனில்லை. நான் முஸ்லிம் என்கிறார். சற்று நேரத்தில் மூமின் என்கிறார். குர்ஆன் ஹதீஸ் படி நடக்க வேண்டும் என்கிறார். சற்று நேரத்தில் குர்ஆன் உன்மீதா இறக்கப்பட்டது என்கிறார். எனவே அவர் சொல்வதெல்லாம் சரி எனச் சொல்லவே, பையன் நம் வழிக்கு வந்து விட்டான் என நினைத்து, நூதனமான ஷிர்க்குகளைச் சொன்னார்.

இப்படிப்பட்ட ஷைகுகளிடம் சிக்குபவர்கள் பெரும்பாலும் கல்வி அறிவு இல்லாதவர்களே. எனவே அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இப்படிப்பட்ட ஷைகுகள் மலிந்தால் உண்மையான கலிமாவைச் சொல்பவர்கள் இல்லாமல் போய்விடும். இதை எல்லாம் எடுத்துச் சொல்ல பெரும்பாலான மவ்லவிகள் முன்வருவதில்லை. நாம் மற்றவர்களை நம்பிச் செயல்படாமல் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்ததுபோல் சாதாரண மக்களும் குர்ஆன் ஹதீஸை நேரடியாக விளங்கிச் செயல்பட முன் வந்தால் அன்றி, இப்படிப்பட்ட வேஷதாரிகளின் வேஷம் கலையப் போவதில்லை. நபி(ஸல்) அவர்களின் காலத்து நிலையை உருவாக்கப் பாடுபடுவோம்.

http://www.readislam.net/thareeqa.htm
Related Posts Plugin for WordPress, Blogger...