சனி, மார்ச் 14, 2015

மனித இன நாகரிகத்தின் மலர்ச்சித் தட(ய)ங்கள்!!


மதி மனிதனின் வழித்தோன்றல் ஆகிய இன்றைய மனிதன் (Modern Man) வளர்ச்சி பெற்று, வளர்மதி மனிதன் (Homo Sapiens Sapien) எனப்படுகிறான். இந்த மனிதன் 35 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவன்.

மொழியின் முன்னோடி

வளர்மதி மனிதன் தன் இனத்தவர்களுக்கு ஒரு செய்தியை வெளிப்படுத்த அவன் எழுப்பிய ஒலிக்குறிப்புகள் உதவின. அதுதான், நாளடைவில் மொழியாக உருமலர்ச்சி பெற்றது.

வேளாண்மையில் மேலாண்மை

இந்நிலையில், வேளாண்மை பிறந்தது; காட்டுப் பயிர்களாக இருந்த சில தானியங்களை, தன் இருப்பிடத்திற்கு வீட்டுப் பயிர்களாக வளர்க்கத் தெரிந்துகொண்டான்.

பயிர்த்தொழில்_அவன் உயிர்த்தொழில்:

முதலில், உணவு தேடியாக இருந்த அவன் நாளடைவில் உணவு உற்பத்தியாளனாகவும் மாறினான்.

அவன் முதலில் பயிரிட்ட தானியம் கோதுமை. நிலநடுக்கடல் நாடுகளிலும், மய்யக் கிழக்கு நாடுகளிலும் 10 ஆயிரம் ஆண்டுகட்குமுன் இதைப் பயிரிடத் தொடங்கிவிட்டான்.

முதல் பயிர்த்தொழில் தொடங்கப்பட்டது தாய்லாந்தில்.

இதன் காலம் கி.மு. 9700ஆம் ஆண்டு. அதாவது, இற்றைக்கு 11700 ஆண்டுகட்கு முன்னர் வேளாண்மை அங்கு தோன்றிவிட்டது. இற்றைக்கு, 9000 ஆண்டுகட்குமுன் அய்ரோப்பா, வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா பகுதிகளில் மிகுதியாக விளையும் பார்லி லெவெண்டர் என்னுமிடத்தில் பயிரிடத் தொடங்கிவிட்டது. 8000 ஆண்டுகட்குமுன், மக்காச் சோளம் மெக்சிகோவில் பயிரிடப்பட்டது.

அரிசியின் அறிமுகம்

அரிசியை (நெல்) விளைவித்து, உலகுக்கு அறிமுகப்படுத்தியது தமிழகம். இது. 5000 ஆண்டுகட்கு முன்னர். ஆஃபிரிக்காவில் சோளம் பயிரிடப்பட்டது.

இற்றைக்கு, 8000 ஆண்டு (கி.மு. 6000) வாக்கில் ஆசியப் பகுதியில் சோயா பயிரிடப்பட்டது.

சுட்டாரய்யா ரொட்டி சுட்டாரய்யா!

மெசபடோமியர்கள், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ரொட்டி சுடத் தொடங்கினர்.

ஏரு பூட்டிப் போவாயே, அண்ணே! சின்னண்ணே!!
ஏர்த்தொழிலுக்கு உதவிய கலப்பை தோன்றி 10

ஆயிரம் ஆண்டுகள் ஆயிருக்கும்.

எருதுகள் பூட்டி உழும் வழக்கம் தோன்றி, 4000 ஆண்டுகள் ஆகியிருக்கும்.

வீட்டுக்குப் பூட்டு

பூட்டு _ சாவியை முதன்முதலில் கண்டுபிடித்து, பழக்கத்துக்குக் கொண்டு வந்தவர்கள் அசீரியர்கள். அந்தக் காலத்து அசீரியா, தற்போதைய ஈராக்கின் வடபகுதியாகும். ஏறத்தாழ, 4000 ஆண்டுகளுக்கு முன்பே மரத்தாலான மிகப்பெரிய பூட்டு_சாவியை அவர்கள் பயன்படுத்தி வந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள்

கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உலோகத்தால் பூட்டு_சாவி செய்யும் முறையைக் கண்டுபிடித்தவர்கள் உரோமானியர்கள். அவர்கள் கையாண்ட முறையின் அடிப்படையில்தான் தற்போதைய பூட்டுசாவிகள் உருவாகின்றன.

வீட்டு விலங்குகள்

செம்மறியாடுதான் முதன்முதலாக வீட்டு விலங்காக வளர்க்கப்பட்டது. இற்றைக்கு 11 ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர். எருது போன்ற கால்நடைகளை வளர்க்கத் தொடங்கியது இற்றைக்கு 8500 ஆண்டுகளுக்கு முன்னர்.

நட்பின் நாயகம்

மனிதன், வேட்டையாடி உணவு திரட்டிய காலங்களில் அவனுக்கு உற்ற நண்பன் ஆக விளங்கிய நாற்கால் விலங்கு நாய்தான்! ஏறத்தாழ, 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே, மனிதனைப் பின்தொடர்ந்து அவனது முதல் நண்பனாய்த் திகழ்ந்த இனம் நாய்தான்!

நகரங்களின் அடிப்படையில் நாகரிகம் ஆற்றங்கரை ஓரத்திலே:

நாடோடி வாழ்க்கை முடிவுக்கு வந்தது; நிலையான இடத்தில் வாழ்க்கை தொடங்கியது. கூடாரங்கள் மறைந்தன; குடிசைகள் பிறந்தன; ஊர்கள் உருவாயின; நாளடைவில், நகரங்கள் எழுந்தன; வேளாண் பொருளியல், தொழிற்பொருளியலைப் போற்றி முன்னேற்றம் ஏற்பட்டது; ஆற்றங்கரைகளில் அமைந்த நகரங்களின் பின்னணியில் நாகரிகம் தோன்றி வளரத் தொடங்கியது. வளரும் நாகரிகத்தின் வளர்ப்புப் பண்ணை



கி.மு.3100ஆம் ஆண்டு வாக்கில், ஓவிய எழுத்துகள் உருவாயின. நாகரிகத்தின் நல்லதொரு வளர்ப்புப் பண்ணையாக மெசபடோமியா கூறப்படுகிறது. எழுத்துகள் செம்மையாக உருவாயின. உருளைகள் (Wheels) இங்குதான் தோன்றியிருக்கலாம் என்பர் ஆய்வறிஞர்கள். நகர நாடுகள் (City States) முதலியவற்றின் பிறப்பிடம் இதுவே.

தனியுடைமைத் தத்துவம்

எகிப்து உழவர்கள் மண் வீடு கட்டினர். கி.மு. 3000 (இற்றைக்கு 5000)இல் மெசபடோமியா, சிரியாவைச் சேர்ந்தவர்கள் செங்கல் செய்யும் வழிமுறைகளைக் கண்டறிந்தனர். மாபெருங் கட்டடங்கள் மாளிகைகள் ஆக எழும்பின. முடியாட்சி முறை முகிழ்த்தது; அடிமைகளை வைத்து வேலைவாங்கும் முறை (Serfdom) தோன்றியது. தனியுடைமைத் தத்துவம் பிறந்தது; தழைத்தது; நிலைத்தது.

சிற்றரசும் பேரரசும்

நகரங்கள் காலப்போக்கில் பலப்பல தோன்றின. இவை, சிற்றரசுகள் ஆயின; உலகின் முதல் நகரம் யூரக்; 7000_8000 ஆண்டு வாக்கில் யூப்ரட்டீஸ் ஆற்றங்கரையில் இது தோன்றியது; நகரை ஆள மன்னர்கள் உருவாயினர்; அவர்கள் வாழ அழகிய அரண்மனைகள்; அங்கே, கோட்டை -_ கொத்தளங்கள் எழும்பின. கி.மு. 2400ஆம் ஆண்டில் மெசபடோமியப் பேரரசு (Empire) சார்கான் என்பவரால் நிறுவப்பட்டது.

நானொரு சிந்து - திராவிடச் சிந்து:

4500 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்துவெளியில் மொகஞ்சதாரோ அரப்பா நகர நாகரிகங்கள் மலர்ந்தன. சிந்துவெளி நாகரிகம் திராவிடர் இனத்தின் சீரிய நாகரிகமாக விளங்கியது.

இந்த நாகரிகத்தை உலகறியச் செய்தவர். வணக்கத்துக்குரிய ஈராசுப் பாதிரியார் அவர்கள் ஆவர் (Rev. Fr. Heros).திட்டமிட்ட முறையில் (Planning System) நகரமைப்பு, கழிவு நீர், வடிகால் வசதிகள் கொண்ட உலகின் முதல் நகரமாக மொகஞ்சதாரோ அமைப்பு சீரிய வகையில் ஈடும் எடுப்பும் இல்லாது திகழ்ந்திருந்தது.

உலோகங்களும் - உபயோகங்களும்

கி.மு-.6500இல் துருக்கியில் செம்புத்தாது (Copper Ores) கண்டெடுக்கப்பட்டது. கி.மு.5000இல் செம்பை உருக்கி எடுக்கத் தெரிந்திருந்தனர் மக்கள். மனிதன் கண்டுபிடித்த முதல் உலோகம் செம்புதான்! கி.மு. 3500_3000இல், உலோகத் தொழில்நுட்பம் மெசபடோமியாவில் தோன்றியது.

கி.மு. 3600இல், தாய்லாந்தில், பான்சியாங் சிற்றூரில் புதைகுழியில் வெண்கல ஈட்டிமுனை, வெண்கலச் சிலம்பு, கடகம் முதலியன கண்டுபிடிக்கப்பட்டன.

பொன்னை விரும்பும் பூமியிலே...

கி.மு.5000 ஆண்டு வாக்கில் பொன் (தங்கம்), வெள்ளி முதலான உலோகங்களையும் மெசபடோமியோ, எகிப்துப் பகுதிகளில் பயன்படுத்தத் தொடங்கினர். ஏறத்தாழ, கி.மு.1400 வாக்கில், இரும்பினாலான ஆயுதங்களும் அவ்விடங்களில் பயன்படுத்தப்பட்டன.

உழைக்கும் கைகளே! உருவாக்கும் கைகளே!

மரங்களைப் பயன்படுத்தி, பல கருவிகள் செய்யும் கைத்தொழில்கள் தோன்றின. கி.மு. 7000_6000 ஆண்டுவாக்கில், தானியங்கள் சேகரித்துவைக்கும் மண்பாண்டங்கள் செய்யப்பட்டன. முதலில், பச்சைக் களிமண்பாண்டங்களும், பின்னர் சுட்ட களிமண் பாண்டங்களும் செய்ய சுமேரியர்கள் வழிகாட்டினர்.

சக்கரங்களின் சாகசம்

விரைந்து சுழலும் சக்கரங்களின் உதவியால் யூரக் நகரில் கி.மு.3800 ஆண்டு வாக்கில், மண்பாண்டங்கள் வனையப்பட்டன.

சின்னச்சின்ன இழை பின்னிப்பின்னி...

கம்பளி, சணல் மூலம் துணி நெய்யப்பட்டது. சிந்துவெளிப் பகுதியில், பருத்தி பயிரிடத் தொடங்கியதும், அதிலிருந்து துணி நெய்யத் தொடங்கியதும் இந்தக் காலகட்டத்தில்தான்!

இறந்த உடலுக்கு இறுதி மரியாதை

இறந்த உடலைப் புதைக்கும் வழக்கம் 4 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே! தோன்றிவிட்டது. இறந்த உடலுக்கு மலர்க்கொத்து வைத்து இறுதி மரியாதை செய்யும் வழக்கம் 60 ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே! தோன்றிவிட்டது.

மெல்லப் புகுந்தது கடவுள்

கி.மு.7000_6000 ஆண்டு வாக்கில் பெண் தெய்வ வழிபாடு நடைமுறைக்கு வந்துவிட்டது. இற்றைக்கு, ஏறத்தாழ 6000 முதல் 7000 ஆண்டுகளுக்குமுன் கடவுள் வழிபாடு தோன்றியது. சடங்குகள், வழிபாடுகள், மதங்கள் முதலானவை அன்றைய மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும்பங்கு ஏற்கத் தொடங்கின. வீரம், செல்வம், கலை இவற்றிற்கெனவும், ஆக்கல், காக்கல், அழித்தல் இவற்றிற்கெனவும் தனித்தனிக் கடவுள்கள் கற்பிக்கப்பட்டன.

நாகரிக வளர்ச்சிப் பாதையில் நடைபோட்ட மனித இனம் கையும் கையும் பேசியது அன்பால் அன்றோ?

முதலில், நாக்கு செய்யும் பணியைக் கை செய்தது; இந்தச் செய்கை மருவி சைகை எனப்பட்டது. கைகளைக் கொண்டே கருத்துப் பரிமாற்றம் கனகச்சிதமாக நடந்துவந்தது!

நண்பேண்டா

இன்றும், நாம், கைகூப்பி வணங்குவது, வலக்கையை உயர்த்தி அசைப்பது, ஒருவகை சைகை மொழிதான்? கையோடுகை குலுக்குவதும் சைகை மொழிதான்! உன்னுடன் இணைந்து நட்பாக _ நண்பனாக இருக்க விரும்புகிறேன்! என்பது இதன் பொருள் ஆகும். பின்னர், கைமொழி வாய்மொழி ஆனது.

கூடி வாழும் குடும்பம்

கைமொழி வாய்மொழியாக மாறுதல் அடையும்போதே, நாகரிகமும் பண்பாடும் படிப்படியாக வளர்ந்துகொண்டே வந்தது. ஆடை அணிகலன்கள், முடி ஒப்பனை முதலானவற்றில் மாற்றங்கள் தோன்றின. ஆண்_பெண் பிணைப்பால் குடும்பம் உருவாகியது. குடும்பத்தில் புதிய உறுப்பினராகக் குழந்தை(கள்) தோன்றியது; தோன்றின. சிற்றூர், பேரூர், நகரம், மாநகரம் உருவாகக் குடும்பம் அடிப்படையாயிற்று; குடும்பம் குடி ஆயிற்று.

பண்பாட்டு வளர்ச்சிப் பயணம்

தன்னலமும், பொதுநலமும் கொண்ட நடைமுறைச் சமுதாயம் உருப்பெறலாயிற்று. மனிதனின் எண்ண ஓட்டம், கற்பனை வளம் முதலியன, கோட்பாடுகள், அறநெறிகள், ஒழுங்குமுறைகள் பண்பாட்டு வளர்ச்சியின் சின்னமாக விளங்கியது. இயற்கையிலிருந்து, பல வகைகளில், பல நிலைகளில் ஆற்றல் பெறும் அரிய திறன்களை வளர்த்துக் கொண்டது.

சரித்திரம் தொடங்கும் சந்தர்ப்பம்

மனிதனின் மற்றுமொரு சாதனை எழுதக் கண்டுபிடித்தது. எப்பொழுது எழுதக் கற்றுக் கொண்டானோ அப்பொழுது முதலே வரலாறும் தொடங்கிவிட்டது. பேச்சு _ எழுத்து, மாந்த இன முன்னேற்றப் பாதையில் விரைவு நடை போட உதவின.

அறிவியல் வளர்ச்சியின் அரவணைப்பில்:

பொறிகளின் கண்டுபிடிப்புகளும் அறிவியல் வளர்ச்சியும் அவற்றின் பயன்பாடும் மனித இனத்தின் மாபெரும் மலர்ச்சியாகவும் நாகரிக வளர்ச்சியாகவும் திகழ்ந்தன. மின்னணுக்களின் (Electronics) பயன்பாடு, மின்சாரத்தின் (Electricity) தாக்கம் நாகரிகத்தின் உச்சகட்டமாக இன்று நடனமிடுகிறது.

இனியும் வளர்ச்சிகள் தொடரட்டுமே!

இந்த மலர்ச்சியும், வளர்ச்சியும் தொடர்ந்து கொண்டே, தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருந்தது; இருக்கிறது; இருக்கும். மேலும் மேலும், மனித இனத்தின் நாகரிகத்தின் வளர்ச்சி தொடரும்; தொடர வேண்டும். தொடரட்டுமே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...