நான் உயர் நிலை 3, 4 படிக்கும்போது ஏதாவது ஒரு மதத்தை எடுத்து படிப்பது கட்டாயமானதால் பாடங்களும் சுலபமானதால் நான் புத்தமதத்தை தேர்ந்தெடுத்து படித்து வந்தேன். அதில் சொல்லப்பட்ட மனித நேயம் மிகவும் எனக்கு பிடித்திருந்தது. ஆனால் அங்கு இறைவன் இல்லை. பிறகு நான் ஜூனியர் காலேஜ் சேர்ந்தேன். அது ஒரு கிறிஸ்தவ மிசினரி ஸ்கூல். அங்கே எல்லா மாணவர்களும் (முஸ்லிம் மாணவர்களைத் தவிர) வாரத்தில் ஒரு நாள் தேவாலயத்துக்கு கண்டிப்பாக செல்லவேண்டும். அங்கு நாங்கள் உபதேசங்களையும், மத பாடல்களையும் பாடுவோம். இவ்வேளையில் அங்கு ஒரு பாதிரியாரின் உபதேசம் என்னை கவர்ந்தது. அவர் பழைய ஏற்பாட்டில் உள்ள பைபிளிலும் புதிய ஏற்பாட்டில் உள்ள பைபிளிலும் உள்ள தொடர்புகளை விளக்குவார். அப்போது எனக்கு வயது பதினேழு. இருந்த போதிலும் அந்தப் போதனையால் நான் அதில் உறுதியாக இருக்க முடியவில்லை.
நான் பல பிரிவுகளை உடைய சர்ச்சுகளுக்கு மாறி மாறி வந்தேன். பிறகு ஒரு நன்பர் அவரது சர்ச்சுக்கு (St.John St.Margaret) அழைத்துச் சென்றார். இந்தக் கொள்கை எனக்கு பிடித்திருந்தது. சர்ச்சுடைய நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டேன். அங்கு பயிலும் சிறார்களுக்கு மறைமுகமாக கிறிஸ்தவ கொள்கைகளை கதை வடிவத்தில் கூறுவோம். உதாரணமாக வகுப்பு ஆரம்பிக்கும் முன் பிரார்த்தனையும், பைபிள் சம்பந்தப்பட்ட சிறு கதைகளையும் சொல்லி விட்டுத்தான் வகுப்புகளை ஆரம்பிப்போம். மேலும் எங்கள் சர்ச்சில் கால்பந்து, கூடைப்பந்து, மேசைப்பந்து இன்னும் பலவித விளையாட்டுகளை ஏற்பாடுகள் செய்து சுற்று வட்டாரத்தில் உள்ள இளைஞர்களையும், மற்றவர்களையும் அழைத்து நடத்துவோம். அவர்களை பைபிள் வகுப்புக்கும் அழைப்போம். சர்ச்சுகள் விளையாட்டை மதப் பிரச்சாரத்திற்கு பாவிப்பது உலகலவில் புதிது அல்ல என்றாலும் சிங்கப்பூரில் இவ்வகைப் மதப்பிரச்சாரம் அறிமுகம் செய்தது நான் சார்ந்த சர்ச்சுதான்.
இந்நிலையில் நான் அறிந்த ஒரு முஸ்லிம் பெண்மனியை அனுகி அவளிடம் கிறிஸ்த்தவத்தை பற்றி எடுத்துரைத்தேன். ஆனால் அவளோ தன்னுடைய மார்க்கம் உண்மையானதும் என்றும் உறுதியானதும் என்றும் ஆனால் தனக்கு அதுபற்றி எப்படி விளக்கம் அளிப்பது என்று தெரியவில்லையென்றும் கூறினாள். இதற்கு மேலும் நான் கிறிஸ்த்தவ மதத்தை எடுத்து கூற வழியில்லாமல் போய்விட்டது. இந்தச் சம்பவம் என்னை சிந்திக்கத் தூண்டியது.
முஸ்லிம்களில் பலர் மது அருந்துகிறார்கள், போதைக்கு அடிமையாகிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் மதங்களை கைவிடுவதில்லை ஏன்? என்று எனக்கு தெரிந்த நன்பரிடம் கேட்டேன். அவருக்கும் விளக்கம் அளிக்க முடியாமல் என்னை தாருல் அர்க்கம் (Darul Arqam Muslim Converts Association of Singapore) சென்று விளக்கம் கேட்கச் சொன்னார். சரி என்று அங்கு போய் கேட்க முடிவெடுத்தேன். இஸ்லாத்தின் மீது உள்ள நம்பிக்கையினால் அல்ல. என்னை பொறுத்த வரை இஸ்லாமிய மதம் ஒரு தீவிரவாத மதம். அதில் ஒரு உண்மையும் இருக்காது என்று தான் நினைத்திருந்தேன். காரணம் இஸ்லாம் ஓர் நல்ல மதமாக இருந்திருந்தால் முஸ்லிம்களும் நல்லவர்களாக இருப்பார்களே என்றே எண்ணினேன்.
எனக்கு தெரிந்த முஸ்லிம்கள் யாரும் எனக்கு நல்லவராக தெரியவில்லை. ஆனால் ஒருவரைத் தவிர. அவர் என்னோடு ஜூனியர் காலேஜில் படித்துகொண்டிருந்தார். ஆனால் அவர் இஸ்லாத்தை என்னிடம் எடுத்து வைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. மேலும் நான் இஸ்லாத்தை விரும்பாததற்கு என் குடும்பமும், மத்திய கிழக்கில் நடக்கும் சம்பவங்களும் காரணமாகும்.
நான் தாருல் அர்க்கம் சென்று சகோதரர் ரெமி அவ்ர்கள் நடத்தும் வகுப்பில் முதன் முதலில் கலந்துக்கொண்டேன். அவர் சொன்ன இரண்டு விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒன்று இஸ்லாம் கிறிஸ்தவத்தை போன்று உணர்வுப்பூர்வமானது அல்ல. இரண்டாவது இஸ்லாத்தை தழுவ வேண்டுமென்றால் உங்கள் சந்தேகம் தீரும் வரை பொருத்திருங்கள். இஸ்லாத்தைப் பற்றி வேறு கேள்வி இல்லையென்ற பிறகு நீங்கள் இஸ்லாத்தை தழுவிக் கொள்ளலாம் என்று சொன்னார். ஆனால் கிறிஸ்த்தவத்தில் அப்படி இல்லை. கேள்வி மேல் கேள்வி கேட்க குழப்பம்தான் மிஞ்சும்.
மறு சில வாரங்களில் நான் தாருல் அர்க்கம் சென்று “Pllar of Islam” என்ற வகுப்பில் இடையில் கலந்து கொண்டதால் ஆர்வமில்லாமையால் ஓரிரு வகுப்பு மட்டும் சென்று நிறுத்திக்கொண்டேன். அதன் பிறகு அஹமத் டீடாட் எழுதிய (Ahmad Deedat) எழுதிய “The Choice”, “Islam and Christianity” கேரி மில்லர் எழுதிய “The Basis of Muslim Belief” புத்தகங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. பிறகு நான் மீண்டும் ரெமியை சந்தித்தபோது அவர் உஸ்தாத் ஜுல்கிப்லீயை எனக்கு அறிமுகம் செய்தார். பிறகு நானும் அவரும் பல வாரங்கள் இஸ்லாத்தைப் பற்றி கலந்துரையாடினோம்.
அவர் கிறிஸ்த்தவத்தைப் பற்றி என்னிடம் கேள்வி எழுப்பியபோது நான் சரியான பதில் கூற முடியாத காரணத்தால் அதே கேள்விகளை எங்கள் சர்ச்சிடமும், சிங்கப்பூர் பைபிள் காலேஜிடமும் கேட்பேன். அவர்களின் பதில் எனக்கு திருப்திகரமாக இல்லை. அதே வேளையில் அவர்களின் பதிலை நான் ஏற்றுக்கொண்டால் இறைவனை நான் அவமதிப்பதாகிவிடும். அதாவது பைபிளில் (Trinity) எனப்படும் (மாதா, பிதா, பரிசுத்தஆவி) என்ற கோட்பாடு இயேசுவுக்கு பிறகு 325AD அறிமுகமானது.
பைபிளில் எனக்கேற்படும் சந்தேகங்களை குறித்து எங்கள் சர்ச்சுகளில் கேட்டால் சிறு பிழைகள் என்றும் அச்சுப் பிழைகள் என்றும் சொல்லி விடுகிறார்கள். மேலும் கிறிஸ்த்துவத்தைப் பற்றி தாருல் அர்க்கம்மில் கிடைத்த தகவல்கள் மூலம் நான் திருப்தியடயவில்லை. அவைகள் எல்லாம் சரியானதா என பல நூல்களை (Encyclopedia) பார்வையிட்டதில் அவைகள் யாவும் உண்மை என தெரிய வந்தது. மேலும் முஹம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு பைபிளில் இருப்பதையும் அறிந்தேன். இனிமேலும் நான் ஒரு கிறிஸ்த்தவனாக இருப்பதில் எந்தக் காரணமும் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன்.
பிறகு ஒரு நாள் தாருல் அர்க்கமில் உஸ்தாத் ஜுல்கிப்லீ அவர்கள் என்னை எப்பொழுது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள போகிறீர்கள்? என்று கேட்டார். நான் சொல்வதற்கு வார்த்தையின்றி மெளனமானேன். நான் மீண்டும் மீண்டும் சிந்தித்ததில் இனிமேலும் தூய இஸ்லாத்தை தழுவாமல் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று முடிவுக்கு வந்து உண்மை மார்க்கத்தை தழுவினேன்.
ஆரம்பத்தில் என் குடும்பத்தார் நான் இஸ்லாத்தை தழுவியதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. நான் எப்பொழுதும் போலவே பன்றிக்கறி சாப்பிடுவேன் என்றும் மற்றவர்களைப் போலவே இருப்பேன் என்றும் நினைத்துக் கொண்டார்கள். நான் இஸ்லாத்தை கடைபிடிக்க ஆரம்பிததும் வீட்டில் பிரச்னை ஆரம்பமானது. அடுத்து நான் தொழுவதையும், ரமழான் மாதம் நோன்பு வைப்பதையும் கண்டவுடன் மேலும் பிரச்னையாகி அதிகமாகியது. இப்படியே பல மாதங்கள் கடந்தன. ஹலால் உணவை கிட்டாது என்பதால் வீட்டில் உண்ணுவதையும் நிறுத்திக்கொண்டேன்.
என் குடும்பத்தின் மீது எனக்கு எந்தப் பாசமும் இல்லையென்று குறை கூறினார்கள். எங்களுக்கிடையில் எப்பொழுதும் வாக்குவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. நான் எவ்வளவோ இஸ்லாத்தைப் பற்றியும் எடுத்து கூறியும், அவர்கள் புரிந்துக்கொள்ளத் தயாரில்லை. நான் வெளியே சென்று இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்ப பயந்தேன். ஒரு நாள் எனது தாயார் என்னை அனுகி வீட்டுக்கு தாமதமாக வரவேண்டாமென்றும் என்னைப் பற்றி எனது தந்தை கவலைபடுவதாக கூறினார். எனக்கு தனியாக ஹலால் உணவு சமைத்து தருவதாகவும் கூறினார். இப்பொழுது தன் முஸ்லிம் மகனின் வசதிக்காக எல்லோருமே பெரும்பாலான நேரத்தில் என்னுடன் சேர்ந்து ஹலால் உணவு சாப்பிடுகிறார்கள். முன்பைவிட இப்பொழுது குடும்பத்தின் நிலைமை சுமூகமாய் உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக